Saturday, June 21, 2008

வாழ்க்கை

வாழ்க்கை

மனித வாழ்வு
ஒரு பெரும் சரிவு...
இழந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை !

அடையும் ஒவ்வொன்றும்
ஆயிரம் மடங்கு விலை..
விலை ஒவ்வொன்றும்
இளமையில் ஆயிரம் பங்கும் எடை !

இளமையை விற்று
அனுபவங்களை வாங்கிக் கொள்கிறோம் !

இளமை,
வயது
அனையத் தொடங்குகையில்...
தொலை தூரத்தில் ஒரு கனவு,
வெளியென ஒளிபெற்று விரிந்து கிடக்கிறது !

ஏக்கம் மிகுந்த கண்ணீருடன்
இக்கரையில் நின்றபடி -
நம் புண்களையும்,
உதவாத நாணயங்களையும்
எண்ணிக் கொண்டிருக்கிறோம் !

பாரதப் போர் முடிந்து, அர்ஜுனன் ஆற்றங்கரையில் ஆயுதங்களை கழுவியபடி - சிரித்த சிறு வயதுப் பருவத்தையும், இழந்த இளமைக் காலப் போரட்டத்தையும், வெற்றி பெற்ற போர்க்களத்தையும் பற்றிச் சிந்திக்கிறான்.

சாதனைகளையும் இழப்புகளையும் எண்ணிப் பார்க்கையில் வாழ்க்கை என்னவென்றே அவனுக்குப் புரியவேயில்லை.

------------------------------------ *** --------------------------------------------------------
அதிகப்பட்ச ஆயுள் காலத்தில் கால் பகுதி கல்விக்காகவும் வேலை தேடுவதிலும் கழிந்து விடுகிறது.

வேலை கிடைத்து அலுவலகத்திலேயே சிலர் வாழ்கிறார்கள்.

வேறு சிலர் பொருளாதார வேட்டையிலேயே பொழுதைக் கழிக்கிறார்கள்.

சட்டென்று குடும்பம் கடமைகள் என்று மேற்கொள்ளும் விரைவுப் பயணத்தில் வாழ்வின் எல்லையும் வந்துவிடுகிறது.

அப்படியென்றால் வாழ்க்கை ?

ஒரு கவிதத்துவமான வாழ்க்கைக்கான முயற்சி:

வேகமாய் போய்க்கொண்டிருக்கும் வேளையில்
சட்டென்று குறுக்கிடும் சில்லென்ற காற்றுக்காக
ஒரு சில நொடிகள் காத்திருக்கலாம் !

ஒரு முறையேனும் காகிதப் பணத்தைப் பற்றிக்
கவலைப் படாமல் மழையில் நனையலாம் !

ஏதேனும் ஹோட்டலில் மூன்று நாட்கள் தங்கி
கடிகாரத்தையே பார்க்காமல்
தூங்கியும் சாப்பிட்டும் பொழுதைக் கழிக்கலாம் !

ஒரு புத்தகத்தின் கடைசிப் பக்கத்திலிருந்து படிக்கலாம் !

தெரியாத ஊருக்குள் கால் வலிக்க நடக்கலாம் ! “

இப்படி நாமாகவே யோசித்தோ அல்லது வைரமுத்துக் கவிதைகளைப் படித்தோ நாம் வாழ்ந்து பார்க்கலாம்.
ஆனால் வாழ்க்கையென்றால் ?

கவிஞர் கண்ணதாசன் பாடல்

“பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்.
பிறந்து பாரென இறைவன் பணித்தான் !

இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்.
இறந்து பாரென இறைவன் பணித்தான் !

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்.
மணந்து பாரென இறைவன் பணித்தான் !

அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்.
ஆண்டவன் சற்றே அருகில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான் !


இப்பொழுது சொல்லுங்கள் “வாழ்க்கை” என்றால்?